ENG vs NZ, 2nd test, Day 3: சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்; வெற்றியை உறுதி செய்த நியூசிலாந்து!

Updated: Sat, Jun 12 2021 23:36 IST
ENG vs NZ, 2nd test, Day 3: Dominant New Zealand close in on series win (Image Source: Google)

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயன 2ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டிக்கு நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் லாரன்ஸ், ரோரி பர்ன்ஸ் தலா 81 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்களையும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டேவன் கான்வே, வில் யங், ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதமடித்து வலிமான நிலைக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 388 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதில் வில் யங் அதிகபட்சமாக 82 ரன்களையும், டேவன் கான்வே, ராஸ் டெய்லர் தலா 80 ரன்களையும் சேர்த்தனர். 

அதனைத் தொடர்ந்து 85 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி, ஸாக் கிரௌலி, ஜோ ரூட், ஒல்லி போப், டேனியல் லாரன்ஸ் என அனைத்து முன்னணி வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து முன்னிலைப் பெற்றது. 

பின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே சேர்த்து, 37 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி, நெய்ல் வாக்னர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 

இங்கிலாந்து அணி தரப்பில் ஒல்லி ஸ்டோன் 29 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் ஏதுமின்றியும் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர். இதனால் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை