ENG vs NZ, 3rd Test: லேதம், சான்ட்னர் அரைசதம்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டம் லேதம் மற்றும் வில் யங் இணை தொடக்கம் கொடுத்தர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 43 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த டாம் லேதமும் 63 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் 44 ரன்னில் கேன் வில்லியம்சனும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கிளென் பிலீப்ஸ், மேட் ஹென்றி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் சான்ட்னர் - டிம் சௌதீ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிம் சௌதீ ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 23 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் மிட்செல் சான்ட்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மிட்செல் சான்ட்னர் 50 ரன்களுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.