சுழற்பந்து வீச்சாளராக மாறிய கிறிஸ் வோக்ஸ்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - காணொளி!

Updated: Sun, Sep 08 2024 10:13 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியானது இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்து தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது கேப்டன் ஒல்லி போப்பின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 325 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஒல்லி போப் 154 ரன்களைக் குவித்தார். இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிலன் ரத்நாயக்கே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே 9 ரன்களுக்கும், குசால் மெண்டிஸ் 14 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 3 ரன்களுக்கும், தினேஷ் சண்டிமால் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்காவும் அரைசதத்தை பதிவுசெய்திருந்த நிலையில் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இருவரும் தங்கள் அரைசதத்தை பதிவுசெய்து அசத்தியதன் மூலம், இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் தனஞ்செயா டி சில்வா 64 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ஸ்டோய்ன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 114 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

 

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் திடீரென சுழற்பந்துவீச்சாளராக மாறியது கிரிக்கெட் ரசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, இன்னிங்ஸின் 7ஆவது ஓவரில் முதல் இரண்டு பந்துகளை கிறிஸ் வோக்ஸ் வீசிய நிலையில், மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக அந்த ஓவரை சுழற்பந்துவீச்சாளருக்கு மாற்றும் படி இங்கிலாந்து கேப்டனிடம் கள நடுவர்கள் தெரிவித்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதனையடுத்து அந்த ஓவரில் எஞ்சியிருந்த நான்கு பந்துகளையும் கிறிஸ் வோக்ஸ் ஆஃப் பிரேக் முறையில் ஸ்பின் பௌலிங் செய்து முடித்தார். இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் திடீரென ஆஃப் பிரேக் சுழற்பந்து வீச்சாளராக மாறி பந்துவீசிய நிகழ்வானது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அவர் ஆஃப் பிரேக் பந்துவீசும் காணொளியும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை