ENGW vs INDW 2nd ODI: தோல்வியைத் தவிர்த்து தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் (ஜூன் 27) பிரிஸ்டோலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜூன் 30) டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்திய மகளிர் அணி நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒருநாள் தொடரை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அணி
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவும், தீப்தி சர்மா, பூனம் ராவத் ஆகியோருடன் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மாவும் பேட்டிங்கில் வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் முந்தைய போட்டியில் மிதாலி ராஜ், பூனம் ராவத் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பந்துவீச்சிலும் ஜூலன் கோஸ்வாமி, ஷிக்கா பாண்டே, பூஜா வட்ஸ்ரேக்கர் ஆகியோர் தங்களது திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி
ஹீத்தர் நைட் தலைமையிலான உலக சாம்பியனான இங்கிலாந்து மகளிர் அணி உலகின் மிகவும் வலுவான கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.
அதிலும் டாமி பீயூமன்ட், நாட் ஸ்கைவர், எமிலி ஜோன்ஸ், அன்யா ஸ்ருப்சோல், சோபி எக்லெஸ்டோன், கேத்தரின் பிரண்ட் என திறமையான வீராங்கனைகள் நிறைய பேர் அந்த அணியில் உள்ளனர். அதுவும் உள்ளூர் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இதனால் நாளைய போட்டியிலும் அவர்கள் தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தி தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 70 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 30 போட்டிகளில் இந்தியாவும், 38 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் முடிவின்றி அமைந்துள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.