டி20 உலகக்கோப்பை: மீண்டுமொருமுறை நாயகன் என்பதை நிரூபித்த பென் ஸ்டோக்ஸ்; கோப்பையை வென்றது இங்கிலாந்து!

Updated: Sun, Nov 13 2022 17:13 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்பர்னில் நடந்துவருகிறது. பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங்  ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை தொடக்கம் முதலே கட்டுப்பாட்டில் வைத்தனர் இங்கிலாந்து பவுலர்கள். தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை 15 ரன்களுக்கு சாம் கரன் வீழ்த்தினார். கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த முகமது ஹாரிஸை வெறும் 8 ரன்னுக்கு வெளியேற்றிய அடில் ரஷீத், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 32 ரன்களுக்கு வீழ்த்தினார்.

இஃப்டிகார் அகமது ரன் அடிக்காமல் டக் அவுட்டானார். ஷான் மசூத் மட்டும் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி நம்பிக்கையளித்தார். 28 பந்தில் 38 ரன்கள் அடித்த ஷான் மசூத்தை அதன்பின்னர் நீடிக்கவிடாமல் சாம் கரன் அவுட்டாக்கி அனுப்பினார். ஷதாப் கான் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை சாம் கரனும் கிறிஸ் ஜோர்டானும் இணைந்து அருமையாக வீசி, 4 ஓவரில் 20 ரன்களுக்கும் குறைவாக கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது.

இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சாம் கரண் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ஆதில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் இந்த தொடரில் இதுவரை அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றமளித்தார். 

இதையடுத்து களமிறங்கிய பில் சால்டும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லரும் 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் - ஹாரி ப்ரூக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

அதன்பின் 20 ரன்களில் ப்ரூக் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மொயின் அலியும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அதன்பின் 19 ரன்களுக்கு மொயீன் அலி ஆட்டமிழாந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனைப்படைத்தது. மேலும் இரண்டாவது முறை கோப்பையை வெல்லும் இரண்டாவது அணி எனும் பெருமையையும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை