ENGW vs PAKW, 3rd Odi: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் முடிவில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியே முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செம்ஸ்ஃபோர்டில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணியானது நாட் ஸ்கைவர் பிரண்ட்டின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 302 ரன்களை குவித்தது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஸ்கைவர் பிரண்ட் 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 124 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக விளையாடிய அலிஸ் கேப்ஸியும் 39 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் உம் இ ஹனி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் மகளீர் அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சதாஃப் ஷமாஸ், சித்ரா அமீன், ஆயிஷா ஸஃபர், நஜிஹா அல்வி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த முனீபா அலி - அலியா ரியாஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனீபா 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 36 ரன்கள் எடுத்திருந்த அலியா ரியாஸும் விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகளால் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுகு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் மகளிர் அணியானது 29.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.