இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Sun, Feb 18 2024 18:43 IST
இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டியில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியதுடன், முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதுடன் 153 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனால் அவரைத் தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவற இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன், முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் பின் தங்கியது. 

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 214 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 68 ரன்களையும் சேர்க்க 430 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் இலங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சதம் மற்றும் 5 இக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், மூன்றாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தாலும், எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பென் டக்கட் மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் விளையாடிய விதம் வியப்பை ஏற்படுத்தியது. பென் டக்கட் விளையாடியதை போன்றே அனைவரும் விளையாட விரும்பினோம். முதல் இன்னிங்ஸில் முடிந்தவரை அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி எடுத்திருந்த ரன்களுக்கு அருகில் வந்துவிட வேண்டும் என்றே நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தை விட எங்களது முதல் இன்னிங்ஸ் விரைவாக முடிவுக்கு வந்துவிட்டது.

சில நேரங்கள் நமது திட்டங்கள் எதுவுமே களத்தில் பயனளிக்காது. எங்களின் இந்த தோல்வி குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஆனால் எனது சக வீரர்களின் கருத்தே எனக்கு மிக முக்கியம். இத்தோல்வியின் மூலம் நாங்கள் 1-2 என்ற கணக்கில் இத்தொடரில் பின் தங்கி இருந்தாலும், எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. இது எங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகவே நான் பார்க்கிறேன். அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சிந்தித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை