WI vs ENG: ஜோஸ் பட்லர் குறித்து வெளியான தகவல்; டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளனர்.
இதனையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் இருந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகினார். இதன் காரணமாக அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் மைக்கேல் பெப்பர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை லியாம் லிவிங்ஸ்டோன் வழிநடத்துவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதேசமயம் டி20 அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அவரது காயம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு பின்னடவை ஏற்படுத்தும் வகையில் ஜோஸ் பட்லர் குறித்த அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக செயல்படாமல், சாதாரண வீரராக மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவருக்கு பதிலாக பில் சால்ட் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பட்லர் மீண்டும் காயம் அடைவதை தடுக்கும் வகையில் அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் அவர் இத்தொடரில் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், டி20 தொடரில் மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாஃபர் சோஹன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.