மகளிர் டி20 உலகக்கோப்பை: நாட் ஸ்கைவர் காட்டடி; பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரான தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி, அலிஸ் கேப்ஸி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டேனியல் வையட் - நாட் ஸ்கைவர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 59 ரன்கள் எடுத்த நிலையில் டேனியல் வையட் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹீதர் நைட்டும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ஸ்கைவருடன் இணைந்த எமி ஜோன்ஸும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோரும் உயர்ந்தது. இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடுவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தர் நாட் ஸ்கைவர் 81 ரன்களுடனும், எமி ஜோன்ஸ் 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.