இங்கிலாந்து குழப்பமில்லாத அணி என்பதை நிரூபித்துள்ளனர் - நாசர் ஹுசைன்!

Updated: Mon, Jan 29 2024 14:19 IST
இங்கிலாந்து குழப்பமில்லாத அணி என்பதை நிரூபித்துள்ளனர் - நாசர் ஹுசைன்! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 25ஆம் தேதி ஹைத்ராபாத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 190 ரன்களுக்கு மேல் இந்திய அணி முன்னிலைப் பெற்ற நிலையிலும், இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாஸ்பால் எனும் அதிரடியான ஆட்டமுறையை இங்கிலாந்து அணி பின்பற்றி வெற்றிகளை குவித்து வந்ததால், இந்தியாவில் அவர்கள் எவ்வாறு செயல்படுவாகள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. மேலும் இங்கிலாந்தின் பாஸ்பால் திட்டம் இந்தியாவில் எடுபடாது என பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். ஆனல் அவர்களின் விமர்சனங்கள் அனைத்திற்கு இங்கிலாந்து அணி தங்களது வெற்றியின் மூலம் பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றியை அந்த அணியின் முன்னாள் வீரர் நாசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை அவர்கள் ஒருபோதும் கண்டுக்கொள்வதில்லை. மற்ற முன்னாள் வீரர்கள் அனைவரும் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பயிற்சி போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறிவந்தனர். ஆனல் இங்கிலாந்து அணியிடம் பிடித்ததே அவர்களின் பிடிவாதம் தான். அவர்கள் மீது சந்தேகம் வரும் போதெல்லாம், அவர்களின் பிடிவாத குணமும் இரண்டு மடங்காக உயர்கிறது. 

இதனை ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் வெளியில் இருந்து கருத்துகளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது இங்கிலாந்து அணிக்கு என்ன வேண்டும் என்பது நன்றாக தெரியும். அவர்களும் தங்களது ஆட்டத்தை இப்படிதான் தொடர்வார்கள்.  என்னை பொறுத்தவரை, இந்த இங்கிலாந்து அணி அபாயகரமான அணியாக உள்ளது. மேலும் அவர்கள் குழப்பமில்லாத அணி என்பதை அனைவருக்கும் நிரூபித்துள்ளனர்” என்று பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை