டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி இதுதான் - நாசர் ஹுசைன்!
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 10 போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.
அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் முதல் முறையாக மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது.
இந்த தொடரில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாள், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில் இந்த டி20 உலகக்கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நாசர் ஹுசைன் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் ரொம்ப அதிகமாக அலசிய ஆராய விரும்பவில்லை. இம்முறை தென் ஆப்பிரிக்க அணி தான் டி20 உலககோப்பையை வெல்லும் என்று கருதுகிறேன். ஏனெனில் அவர்களது செயல்பாடு மிகவும் திருப்தியாக உள்ளது. இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் என்றாலும் அவர்களின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சொந்த மண்ணில் அந்த தொடரானது நடைபெற இருப்பதால் அவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது.
ஆனால் தற்போதைய நிலையில் தென்னாப்பிரிக்க இங்கிலாந்து அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்றும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியே வெல்லும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் தற்போது உள்ள தென்னாப்பிரிக்க அணி மிகவும் சமமான அணியாக இருக்கிறது. அவர்கள் விளையாடி வரும் கிரிக்கெட் நன்றாக இருப்பதால் அவர்களுக்கே வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்” என்று நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.