இந்தியாவிடம் 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் எனக்கு கவலையில்லை - பென் டக்கெட்!

Updated: Tue, Feb 11 2025 22:14 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணியானது முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து விளையாடும் என்பதால் ரசிகர்களின் கவனமும் இப்போட்டியின் மீது உள்ளது.

மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் இது என்பதால், இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தாலும் அது தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும், அணியின் ஒரே கவனம் சாம்பியன்ஸ் கோப்பை வெல்வதில் மட்டுமே இருக்கும் என்றும் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் இங்கு வந்திருப்பது ஒரு விஷயத்திற்காக, அது சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதற்காக. நாங்கள் இன்னும் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறோம். இது ஒரு மிகப்பெரிய தொடர், ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என்பது அதனைவிட மிகப்பெரியது. அதனால் இந்தியாவிடம் 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் அது குறித்து எனக்கு கவலையில்லை, நாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் அவர்களை வீழ்த்துவோம். 

மேலும் நாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டால் இத்தொடர் குறித்து யாரும் பேசமாட்டார்கள்” என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து டக்கெட்டின் கருத்தானது விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், "தெளிவாகச் சொல்லப் போனால், ஒரு அணியாக நாங்கள் நல்ல முடிவுகளை விரும்புகிறோம், இந்தியாவுடன் விளையாடுவது மிகப்பெரிய தொடர்களில் ஒன்றாகும்! ஆனால் எங்கள் இலக்கு சாம்பியன்ஸ் கோப்பையை அடைவது தான்” என்று விளக்கமளித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை