மகளிர் ஆஷஸ் 2023: மீண்டும் சதமடித்த நாட் ஸ்கைவர்; ஆஸிக்கு 286 டார்கெட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டவுண்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சோபியா டங்க்லி, டாமி பியூமண்ட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹீதர் நைட் - நாட் ஸ்கைவர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்துடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 67 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் ஹீதர் நைட் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னும் அதிரடியாக செயல்பட்ட நாட் ஸ்கைவர் மீண்டும் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் அலிஸ் கேப்ஸி 5 ரன்களுக்கும், டேனியல் வையட் 43 ரன்களுக்கும், எமி ஜோன்ஸ் 6 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாட் ஸ்கைவர் 15 பவுண்டரி, ஒரு சிக்சர் என 129 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர், ஜெஸ் ஜோனசன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.