ஐசிசி உலகக்கோப்பை 2023: நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் - ரஸ்ஸி வேண்டர் டூசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் 60 ரன்களில் வேண்டர் டுசென் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரீஸா ஹென்றிக்ஸ் 85 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து 44 ரன்களில் ஐடன் மார்க்ரம் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து வந்த டேவிட் மில்லரும் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து கிளாசெனுடன் இணைந்த மார்கோ ஜான்செனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயரத்தொடங்கியது.
இதில் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ஹென்ரிச் கிளாசென் 61 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெய்ய, மறுப்பக்கம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய மார்கோ ஜான்செனும் 35 பந்துகளில் தனது முதல் அரைசதத்தைக் கடந்து அசத்தினார்.
அதன்பின்னும் அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென் 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 109 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த மார்கோ ஜான்சென் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 75 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இமாயலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஜானி பேர்ஸ்டோவ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 10 ரன்கள் எடுத்த நிலையில லுங்கி இங்கிடி பந்துவீச்சில் வேண்டர் டுசெனிடம் கேட்ச் கொடுத்டு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் 2 ரன்களுக்கும், டேவிட் மாலன் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, நம்பிக்கை நாயகன் பென் ஸ்டோக்ஸும் 5 ரன்கள் எடுத்த நிலையில் காகிசோ ரபாடா பந்திவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 15 ரன்களுக்கும், ஹாரி ப்ரூக் 17 ரன்களுக்கும் ஆதில் ரஷித் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஜெரால்ட் கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்ட இங்கிலாந்து அணியின் படுதோல்வியும் உறுதியானது. இறுதியில் அதிரடியாக விளையாடிய கஸ் அட்கின்சன் 35 ரன்களில் ஆட்டமிழக்க, மார்க் வுட் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 45 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேசமயம் பந்துவீச்சின் போது ரீஸ் டாப்லீ காயமடைந்ததால் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததாக அறிவிக்கப்பட்டு 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி, மார்கோ ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபர வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி தங்களது ஒருநாள் கிரிக்கெட வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.