மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து!

Updated: Tue, Feb 21 2023 22:39 IST
Image Source: Google

மகளிர் டி20 உலக கோப்பையில் க்ரூப் ஏ-விலிருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. இன்று க்ரூப் ஏ-விலிருந்து மோதும் தென் அப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஜெயித்தால் அரையிறுதிக்கு முன்னேறும். தென்னாப்பிரிக்கா தோற்றால் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.

க்ரூப் பி-யிலிருந்து இங்கிலாந்து, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் அந்த க்ரூப்பின் கடைசி லீக் போட்டியில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டன்க்லி (2) மற்றும் கேப்ஸி(6) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 33 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.  மற்றொரு தொடக்க வீராங்கனையான டேனியல் வியாட் மற்றும் 4ம் வரிசையில் இறங்கிய நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 3வது விக்கெட்டுக்கு74 ரன்களை சேர்த்தனர். 

வியாட் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடிய நாட் ஸ்கிவர் பிரண்ட் 40 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 80 ரன்களை குவிக்க, எமி ஜோன்ஸ் 31 பந்தில் 47 ரன்களையும் விளாச, 20 ஓவரில் 213 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 214 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஷதாப் சமாஸ், முனீபா அலி, ஒமைமா சொஹைல், சித்ரா அமீன், நிதா தார், ஆலிய ரியாஸ் என முன்னணி வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதையடுத்து களமிறங்கியவர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து தரப்பில் கேத்ரின் ஸ்கைவ்ர், சாட்லோட் டீன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நாட் ஸ்கைவர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை