இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரிஷப் பந்த் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவ்வின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது. 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ஷுப்மன் கில் (4), ஹனுமா விஹாரி (11), விராட் கோலி(20), ஷ்ரேயாஸ் ஐயர்(19) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஆனால் புஜாரா பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 66 ரன்களுக்கு புஜாரா ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரிஷப் பந்த் இந்த இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஷப் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா 23 ரன்களும், ஷமி 13 ரன்களும் அடிக்க, 245 ரன்களுக்கு இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.
மொத்தமாக 377 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 378 ரன்கள் என்ற கடினமான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. 4ஆம் நாளான இன்றைய ஆட்டத்தின் 2ஆவது செசனில் இங்கிலாந்து இலக்கை துரத்தியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய அலெக்ஸ் லீஸ் 44 பந்துகாளில் அரைசதம் கடந்து அசத்தினார். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 107 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட ஸாக் கிரௌலி 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் 4ஆம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது. மேலும் 271 ரன்கள் மீதமுள்ள இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி விளையாடவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.