மூன்றாவது போட்டிக்கு முன் அபுதாபி செல்லும் இங்கிலாந்து அணி; காரணம் என்ன?

Updated: Mon, Feb 05 2024 22:40 IST
மூன்றாவது போட்டிக்கு முன் அபுதாபி செல்லும் இங்கிலாந்து அணி; காரணம் என்ன? (Image Source: Google)

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. 

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் 10 நாள்கள் ஓய்வு இருப்பதால் இங்கிலாந்து அணி அபுதாபி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இத்தொடருக்கு முன்னதாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து அணி தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு இந்தியாவிற்கு வந்தடைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் பயிற்சிக்காக அந்த அணி அபுதாபி புறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்னும் ஓரிரு தினங்களில் அபுதாபி செல்லும் இங்கிலாந்து அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கும் இரு தினங்களுக்கு முன் இந்தியா வந்தடையும் என கூறப்படுகிறது. 

ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அந்நாட்டிலேயே பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இங்கிலாந்து அணியோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கிடைக்கும் நேரங்களில் அபுதாபிக்கு சென்று பயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை