EN-U19 vs IN-U19: தாமஸ் ரீவ் அதிரடி சதத்தின் மூலம் இங்கிலாந்து த்ரில் வெற்றி!
இந்திய அண்டர்19 அணி தற்சமயாம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டவது ஒருநாள் போட்டி நேற்று நார்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஆயூஷ் மாத்ரே முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களுக்கும், விஹான் மல்ஹோத்ரா 49 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ராகுல் குமார் 47 ரன்களையும், கனிஷ்க் சௌகான் 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.இதனால் இந்திய அண்டர்19 அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அண்டர்19 அணி தரப்பில் ஏஎம் ஃபிரெஞ்ச் 4 விக்கெட்டுகளையும், ஜேக் ஹோம் மற்றும் அலெக்ஸ் க்ரீன் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அண்டர்19 அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பென் டௌகின்ஸ் 7 ரன்னிலும், ஐசக் முகமது 11 ரன்னிலும், பென் மேய்ஸ் 27 ரன்னிலும், ராக்கி ஃபிளின்டாஃப் 39 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் தாமஸ் ரீவ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ஜோசப் மூர்ஸ், ரால்பி ஆல்பெர்ட், ஜேக் ஹோம் உள்ளிட்டோர் சோபிக்க தவறினர்.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய தாமஸ் ரீவ் 16 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 131 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனாலும் அடுத்து களமிறங்கிய செபாஸ்டியன் மோர்கன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அண்டர்19 அணி 49.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அண்டர்19 அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.