இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம்!
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2ஆவது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மாலை 5.30 மணிக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.
முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் சுருட்ட உதவினார். அவருக்கு உறுதுணையாக மொகமது ஷமி, பிரஷித் கிருஷ்ணா செயல்பட்டனர். இன்றைய ஆட்டத்திலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், இங்கிலாந்து அணிக்கு சவால் தரக்கூடும்.
பேட்டிங்கில் ரோஹித் சர்மா, முதல் ஆட்டத்தில் 58 பந்துகளில் 76 ரன்களை விளாசியிருந்தார். அவரிடம் இருந்து மீண்டும் ஒருமுறை சிறந்த பேட்டிங் வெளிப்படக்கூடும். விராட் கோலி, இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் அவர், இன்றைய ஆட்டத்திலும் களமிறங்குவது சந்தேகம்தான்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்பட முயற்சிக்கும். கடந்த ஆட்டத்தில் அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் இந்திய அணியின் சீரானவேகப்பந்து வீச்சால் தடுமாறியது.
இதனால் ஜாஸ் பட்லர், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரை உள்ளடக்கிய பேட்டிங் குழு கூடுதல் பொறுப்புடன் செயல்பட முயற்சிக்கக்கூடும்.