எளிதாக நாங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டோம் - ஜோஸ் பட்லர்! 

Updated: Sat, Oct 21 2023 22:09 IST
எளிதாக நாங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டோம் - ஜோஸ் பட்லர்!  (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 20ஆவது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலுமே உச்சத்தை தொட்டிருந்தது.

இவ்வேளையில் இந்தன் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பாக கிளாசன் 109 ரன்களையும், ஹென்ட்ரிக்ஸ் 85 ரன்களையும், மார்கோ யான்சென் 75 ரன்களையும் குவித்து அசத்தினர். 

பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 22 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக தென்ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இப்போட்டி முடிந்து தாங்கள் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், “உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளது. நாங்கள் இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் தோற்றுவிட்டோம். இங்கு நாங்கள் வந்ததே நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று தான். 

ஆனால் முதல் இன்னிங்ஸ்சின் போதே எங்களது பல திட்டங்கள் சரியாக செல்லவில்லை. ரீஸ் டாப்லீ காயம் அடைந்தார். இருப்பினும் எங்களது வீரர்கள் சிறப்பாக முயற்சித்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 340 முதல் 350 ரன்கள் வரை அவர்களை சுருட்டி இருந்தால் நிச்சயம் இந்த இலக்கு எட்டக்கூடிய ஒன்றாக தான் இருந்திருக்கும். 

இந்த மைதானத்தில் அதிக வெப்பம் இருந்தது. அதுவும் எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது. இந்த போட்டியில் எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. அதோடு எளிதாக நாங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டதால் எந்த இடத்திலும் எங்களால் போட்டிக்குள் வர முடியவில்லை. இனிவரும் ஒவ்வொரு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டியது அவசியம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை