இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்காது - பிரக்யான் ஓஜா!

Updated: Sun, Jan 21 2024 13:42 IST
இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்காது - பிரக்யான் ஓஜா! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 கிரிக்கெட்டை போல டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அந்நாட்டு அணிக்கெதிராக அதிரடியாக விளையாடி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 3 -0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் கிட்டத்தட்ட பாகிஸ்தான் போன்ற சூழ்நிலைகளை கொண்ட இந்தியாவிலும் அதிரடியாக விளையாடி கோப்பையை வெல்ல ஆவலுடன் காத்திருப்பதாக ஆண்டர்சன் கூறினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் மண்ணில் தார் ரோடுபோல இருந்த பிட்சுகள் இந்தியாவில் இருக்காது என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். அதனால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திட்டத்துடன் களமிறங்காமல் போனால் இங்கிலாந்து அதற்கான பலனை சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "பாஸ்பால் என்ற அதிரடி அணுகு முறையில் இங்கிலாந்து தன்னம்பிக்கையுடன் இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால் அதற்கு தகுந்த கூடுதல் திட்டத்தையும் அவர்கள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பாகிஸ்தான் போன்ற சூழ்நிலைகள் இங்கே இருக்காது. அதேபோல் இந்தியா ஒன்னும் பாகிஸ்தான் கிடையாது. பாகிஸ்தானில் மைதானங்கள் சற்று பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும்.

ஆனால் இங்கே இருக்கும் சூழ்நிலைகள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே இந்தியாவில் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியம். பயமற்ற கிரிக்கெட்டை விளையாடும் அணுகுமுறையை பின்பற்றி இங்கிலாந்து தற்போது மனதளவில் பலமடைந்துள்ளது. ஆனால் அவர்களுடைய பேஸ்பால் ஸ்டைலை இந்தியாவில் செயல்படுத்துவது கடினம். ஏனெனில் இந்திய ஸ்பின்னர்களை அவர்கள் எதிர்கொள்வது சுலபமாக இருக்காது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை