IND vs ENG: சமையல் நிபுணருடன் இந்தியா வரும் இங்கிலாந்து அணி!

Updated: Sat, Jan 06 2024 20:15 IST
IND vs ENG: சமையல் நிபுணருடன் இந்தியா வரும் இங்கிலாந்து அணி! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25 அன்று தொடங்க உள்ளது. பொதுவாக நீண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் முன் எந்த ஒரு வெளிநாட்டு அணியும், டெஸ்ட் தொடர் நடைபெறும் நாட்டிற்கு சில வாரங்கள் முன்கூட்டியே சென்று இரண்டு, மூன்று பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்பார்கள். அதன் மூலம், அந்த நாட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், இந்தியாவில் நல்ல மைதானங்கள், பிட்ச்கள், நெட் பவுலர்கள் என பயிற்சிக்கான எந்த வசதியும் சரியாக கிடைக்காது என முடிவு செய்த இங்கிலாந்து அணி துபாயில் பயிற்சி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே கொஞ்சம் அதிகப்படியான விஷயமாக இருந்தது, எனினும், ஒரு அணி பயிற்சி செய்வது என்பது அதன் விருப்பம் என இந்தியாவில் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.

அதே சமயம், முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலர் வெறும் மூன்று நாட்களுக்கு முன்பு இந்தியா சென்று உங்களால் எப்படி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க முடியும். ஒரு மாதம் முன்பே அங்கு செல்ல வேண்டும் என விமர்சனம் செய்து வந்தனர். ஆனாலும், அந்த அணி டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சி செய்ய துபாய் செல்ல உள்ளது.

முன்பு பாகிஸ்தான் சென்ற போது சரியான உணவு இன்றி இங்கிலாந்து வீரர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு முதல் டெஸ்ட்டில் சரியாக ஆட முடியாமல் போனதாகவும், அதனால் தற்போது இந்தியா வரும் முன் தங்களுடன் சமையல் நிபுணர் ஒருவரை அழைத்து வர உள்ளது இங்கிலாந்து அணி. இது ஒரு வகையில் அவர்களின் சுதந்திரம் என்றாலும், மற்றொருபுறம் இங்கிலாந்து அணி இந்தியாவை ஏளனமாக பார்ப்பது போல உள்ளது. இந்தியாவில் பயிற்சி செய்ய வசதி கிடைக்காது, நல்ல உணவு கிடைக்காது என மறைமுகமாக குறை சொல்வது போல உள்ளது.

வீரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், ஐபிஎல் தொடரில் விளையாட வரும் இங்கிலாந்து வீரர்களும் தங்களுடன் சமையல்காரரை அழைத்து வருவார்களா? என விமர்சனம் செய்துள்ளனர். ஐபிஎல்-இல் பணம் கிடைக்கிறது என்றால் குறை சொல்லாமல் பல்லைக் காட்டிக் கொண்டு வருவதும், டெஸ்ட் தொடரில் விளையாட வருவது என்றால் குறை சொல்வதுமாக இருப்பதை தான் சேவாக் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை