ENGW vs INDW, 2nd ODI: ஹர்மன்ப்ரீத் அபாரம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காண்டெர்பெரியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களிலும், யஸ்திகா பாட்டியா 26 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - ஹர்லீன் டியோல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
பின்னர் 58 ரன்களில் டியோல் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
மேலும் கடைசியாக அவர் எதிர்கொண்ட 11 பந்துகளில் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி 43 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 111 பந்துகளில் 4 சிக்சர், 18 பவுண்டரிகள் என 143 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.