ENGW vs INDW, 3rd ODI: மிதாலி அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பெற்ற இந்தியா!
இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகாளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இப்போட்டியின் போது மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்கைவர் 49 ரன்களையும், கேப்டன் ஹீத்தர் நைட் 46 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - மிதாலி ராஜ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஸ்மிருதி மந்தனா 49 ரன்களில் ஆட்டமிழக்க, மிதாலி ராஜ் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் 46.3 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் கேப்டன் மிதாலி ராஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகியாக மிதாலி ராஜிம், தொடர் நாயகியாக சோபி எக்லெஸ்டோனும் தேர்வு செய்யப்பட்டனர்.