சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஈயன் மோர்கனும் ஒருவர். கடந்த 7 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் வெற்றிகளுக்கு பின் இருக்கும் காரணம் இவர் தான்.
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது, அலெஸ்டர் குக்கிடம் இருந்து மோர்கனுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் இங்கிலாந்துக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். அதிலும் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இவரின் தலைமையில் தான் இங்கிலாந்து அணி பெற்றிருந்தது.
இந்நிலையில் 35 வயதே ஆகும் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோர்கன் காயம் மற்றும் ஃபார்ம் அவுட் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஏலம் போகாத அவர், இங்கிலாந்து அணியில் இருந்தும் புறக்கணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளும் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் 3ஆவது போட்டியில் வெளியே உட்காரவைக்கப்பட்டார். இனி தனது ஃபார்மில் இருந்து மீள முடியுமா என்ற கவலையில் அவர் ஓய்வு பெறப்போவதாக தெரிகிறது.
இயான் மோர்கன் இதுவரை 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,701 ரன்களை அடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 115 போட்டிகளில் 2,458 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 16 போட்டிகளில் விளையாடி 700 ரன்களை சேர்த்துள்ளார்.
மோர்கனை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டனாக சீனியர் வீரர்களான ஜாஸ் பட்லர் அல்லது மொயீன் அலி செயல்படலாம் எனத்தெரிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது பட்லர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் கேப்டனாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.