நான் எங்கிருந்து கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று எனக்கு தெரியும் - விராட் கோலி!

Updated: Sun, Nov 05 2023 21:38 IST
நான் எங்கிருந்து கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று எனக்கு தெரியும் - விராட் கோலி! (Image Source: Google)

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று  இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய அணியும் சேர்ந்து அந்த விருந்தை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறது. மிகக் குறிப்பாக விராட் கோலி தன்னுடைய 49ஆவது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை எடுத்து, ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். ஆனால் பவர்பிளே முடிந்து சுழற் பந்துவீச்சாளர்கள் வந்த பிறகுதான் ஆடுகளம் அவ்வளவு எளிதானது அல்ல என்பது புரிந்தது. இதற்கு அடுத்து விராட் கோலி ஆட்டத்தை மெதுவாக்கி ஸ்ரேயாஸ் ஐயரை வழிநடத்தி, இந்திய அணியை நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றதுடன் தானும் சதம் அடித்து அசத்தினார்.

இன்று 35 ஆவது பிறந்தநாள் காணும் வேளையில் அவருக்கு உலக கிரிக்கெட்டின் ஹீரோ சச்சின் சதசாதனையை சமன் செய்யும் வாய்ப்பும் கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. மேலும் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது பேசிய அவர், “இது எனக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தது. ஏனென்றால் இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி தான் மிகவும் கடினமான போட்டியாளராக திகழ்ந்தார்கள். இதனால் இந்த அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. அதுவும் எனது பிறந்த நாளில் இந்திய அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மக்கள் இந்த நாளை மேலும் ஸ்பெஷல் ஆக எனக்கு மாற்றி விட்டார்கள். 

இன்று காலை எழுந்திருக்கும் போதே நான் பரவசத்துடன் தான் இருந்தேன். ஏனென்றால் இது ஒரு சாதாரண போட்டி கிடையாது. என் பிறந்தநாள் அன்று விளையாட வாய்ப்பு கிடைத்தது. எங்களுடைய தொடக்க வீரர்கள் இன்று நல்ல அடித்தளத்தை கொடுத்தார்கள். ஆனால் பந்து கொஞ்சம் பழையதாக மாறியவுடன் ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏற்றதாக இல்லை. மேலும் அணி நிர்வாகம் என்னை கடைசி வரை பேட்டிங் செய்ய கூறியிருந்தது. இந்த பொறுப்பை நான் எடுத்துக் கொண்டு விளையாடினேன். 315 ரன்கள் கடந்த உடன் நல்ல இலக்கை நெருங்கி விட்டோம் என்று தோன்றியது.

என்னுடைய கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் நான் சந்தோஷமாக இருக்க கடவுள் எனக்கு ஆசிர்வாதம் செய்து இருக்கிறார் என நினைக்கிறேன். இதனால்தான் இத்தனை ஆண்டுகள் செய்ததை மீண்டும் என்னால் மகிழ்ச்சியாக செய்ய முடிகிறது. என்னுடைய சதத்திற்கு சச்சின் வாழ்த்து அனுப்பியதை பார்த்தேன். இந்த தருணத்தில் என்னால் அத்தனையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஏனென்றால் நான் ஹீரோவாக பார்த்த நபரின் சாதனையை சமன் செய்திருப்பது மிகவும் ஸ்பெஷலான தருணமாக நினைக்கிறேன். இது எனக்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம். ஆனால் சச்சின் போல் என்னால் பேட்டிங் செய்ய முடியாது. அந்த ஒப்பிட்டு தவறு என்று தான் நான் சொல்லுவேன். நான் இப்போது மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறேன். ஏனென்றால் நான் எங்கிருந்து கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று எனக்கு தெரியும். சச்சினை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்த நாட்கள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சச்சினிடமிருந்து இப்படிப்பட்ட வாழ்த்து எனக்கு கிடைத்தது நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை