விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ஆகாஷ் சோப்ரா!
கடந்த 2019 வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்குப்பின் மோசமான ஃபார்மால் அவதிப்பட்டு வந்த விராட் கோலி, 2022 ஆசிய கோப்பையில் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுத்து டி20 தொடரில் தன்னுடைய முதல் சதத்தையும் பதிவு செய்தார். ஒருநாள் தொடர்,டி20 தொடர் என அனைத்திலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கிய விராட் கோலி, நடந்து முடிந்த 2022 உலக கோப்பை தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அனைவரும் தட்டு தடுமாறிய ஆஸ்திரேலிய மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் அடித்து தன்னுடைய திறமையை மீண்டும் ஒரு முறை உலகறிய செய்தார்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு டி20 தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற வரிசையில் சூரியகுமார் யாதவிர்க்கு பிறகு இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் விராட் கோலியை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்மான ஆகாஷ் சோப்ரா நெருக்கடியான நிலையிலிருந்து மீண்டு வந்த விராட் கோலி குறித்து பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற வரிசையில் இடம் பிடிப்பார் என்பதை யாருமே நினைத்து பார்க்கவில்லை, தன்னுடைய மோசமான பார்மல் அவதிப்பட்டு வந்த விராட் கோலி, நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரிலும் மிக மோசமாகவே விளையானார். அந்த சமயம் அவருக்கு எதுவுமே சாதகமாக அமையவில்லை.
ஆனால் அந்த நெருக்கடி எல்லாம் சமாளித்து அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றிய விராட் கோலி நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக, மைதானம் மோசமாக இருந்தாலும் அவரால் ரன்களை அடிக்க முடிந்தது “என தெரிவித்துள்ளார்.