ஐபிஎல் அனுபவம் அவர்களுக்கு உதவும் - புவனேஷ்வர் குமார்
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட இலங்கை சென்றுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா உறுதியானதால் 13ஆம் தேடங்க இருந்த தொடர் தற்போது 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் ராணா, சேதன் சக்காரியா, வருண் சக்ரவர்த்தி என ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் செய்தியாளரகளைச் சந்தித்த துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார், இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் அனுபவம் உதவும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“எங்களிடம் மிகச்சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உண்டு. மேலும் டி 20 போட்டிகளில் அவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் அணிகளுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
அதனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பது அணிக்கு பெரும் நன்மையாக அமையும். மேலும் இத்தொடரில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தவுள்ளதால், இத்தொடர் ஒரு நல்ல சுற்றுப்பயணமாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.