ஃபேபியன் ஆலனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கேள்விக்குறியாகிய வீரர்கள் பாதுகாப்பு!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை பிடித்திள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதைத்தொடர்ந்து நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் ஃபேபியன் ஆலன், பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பங்கேற்பதற்பாக நேற்றைய தினம் ஜொஹன்னஸ்பர்க்கிற்கு சக அணி வீரர்களுடன் வந்துள்ளார். இந்நிலையில் ஜொஹ்ன்னஸ்பர்க்கில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் ஃபேபியன் ஆலனை வழிமறித்து துப்பாக்கி முனையில் அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட போருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஃபேபியன் ஆலன் எந்தவிட பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக தனது அறைக்கு திரும்பியதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து பேசிய அவர், “எங்கள் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரே கோலே, ஃபேபியன் ஆலனை தொடர்பு கொண்டார். மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஓபேத் மெக்காய் மூலம் ஆலனிடம் பேசினோம். அவர் பேசுகையில், ஆலன் இங்கு நலமாக இருக்கிறார் என்றும், வேறு ஏதேனும் தகவல்கள் இருந்தால் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணியுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கூறிதாக” அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் பொருட்களை கொள்ளயடித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான பாதுகப்பை உறுதிசெய்ய தவறியதாகவும், இதனால் எஸ்ஏ20 லீக் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.