ஐபிஎல் 2024: தினேஷ் கார்த்திக், விராட் கோலியை பாராட்டிய ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Tue, Mar 26 2024 12:10 IST
ஐபிஎல் 2024: தினேஷ் கார்த்திக், விராட் கோலியை பாராட்டிய ஃபாஃப் டூ பிளெசிஸ்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் போன்றோர் சோபிக்க தவறினாலும் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 77 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இறுதியில் தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 10 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலி இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத் தருவார் என்று தோன்றுகிறது. அவர் இந்த சீசனுக்கு தயாராகி விட்டார் என்று நினைப்பதாக ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இத்தொடரின் ஆரம்பத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெறுவது முக்கியம் என நினைக்கிறேன். அதனை நாங்கள் தற்போது செய்துள்ளதாக நினைக்கிறேன். இப்போட்டியின் இறுதிக்கட்டத்தில் எங்களுடைய வீரர்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தவுடன் நாங்கள் தோற்று விடுவோம் என்று நினைக்கவில்லை. ஏனெனில் இதுபோன்ற சூழலில் இம்பேக்ட் பிளேயர் விதி பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என நம்பினேன். இந்த விதியின் காரணமாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை வைத்து விளையாட முடிகிறது.

இதனை பயன்படுத்தி கடைசி ஓவர்களில் 12 அல்லது 15 ரன்களுக்கு மேல் அடிப்பது என்பது சுலபமாகிவிட்டது. தினேஷ் கார்த்திக் இப்படி விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. தினேஷ் கார்த்திக் இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஒரு நல்ல ஃபினிஷிங்கைப் பெற்றுத் தருவார் என்று நம்புகிறேன். அவர் இந்த சீசனுக்கு தயாராகி விட்டார். ஒரு அணி வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பேட்டிங் வரிசையில் நம்பர் 7 மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கும் வீரர்கள் கையில் தான் இருக்கிறது.

அந்த வகையில் தினேஷ் கார்த்திக் எங்கள் அணிக்கு மிக முக்கியமான வீரர். நாங்கள் மினி ஏலத்தில் எங்களுடைய அணியின் முக்கியமான வீரர்கள் நீடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். சின்னசாமி மைதானத்தில் விளையாடுவது என்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் இங்கு ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக செயல்படும். கோலி இரண்டு மாதம் ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருந்தாலும், அவர் அதே ஃபார்மில் தான் உள்ளார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை