தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் - ஃபாஃப் டூ பிளேசிஸ்!

Updated: Mon, Jan 08 2024 21:58 IST
தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் - ஃபாஃப் டூ பிளேசிஸ்! (Image Source: Google)

ஐபிஎல் போல தென் ஆப்பிரிக்க வாரியம் நடத்தும் எஸ்ஏ20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் விரைவில் தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற அணிகளின் உரிமையாளர்கள் இந்த தொடரில் விளையாடும் அனைத்து 6 அணிகளையும் வாங்கியுள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த தொடரில் ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்ற பெயரில் அணியை வாங்கியுள்ளது.

முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் கடந்த வருடம் விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. இருப்பினும் இம்முறை அதிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் அந்த அணிக்கு டு பிளேசிஸ் மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்நிலையில் 2011 – 2021 வரையிலான காலகட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடியதற்கு தாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று டு பிளேசிஸ் கூறியுள்ளார். ஏனெனில் தோனி தலைமையில் விளையாடிய போது நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “சென்னை அணியில் இளம் வீரராக இருந்தது மகத்தானதாக அமைந்தது. அங்கே எம்எஸ் தோனி மற்றும் ஸ்டீபன் ஃபிளமிங் ஆகியோரிடம் என்னுடைய கேரியரின் ஆரம்பகட்ட பயணத்தில் கற்றுக்கொண்டதில் மிகப்பெரிய பங்கு இருந்தது. அவர்களைப் போன்ற பெரிய வீரர்கள் செய்வதை பார்த்து நிறைய கற்றுக் கொள்ளலாம். என்னுடைய முதல் சீசனில் அவர்களைப் பார்த்து உட்கார்ந்து தேவையான கேள்விகளை கேட்டேன். அவர்களை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும் போது உங்களுக்கு என்ன வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ள முடியும். 

அதே சமயம் நீங்கள் பல்வேறு ஸ்டைல்களை அனைத்து நேரமும் காப்பி அடிக்க முடியாது. அனைவரும் அழைப்பது போல தோனி கூலான கேப்டன். அவர் அழுத்தமான நேரங்களிலும் அமைதியாக இருப்பார். பொதுவாகவே நீங்கள் அழுத்தமான நேரங்களில் ரிலாக்ஸாக இருந்து பந்து வீச்சு கூட்டணியில் மாற்றங்களை செய்து பயன்படுத்துவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை