நாங்கள் ஒரு இருபது ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் தங்களது அணி பந்து வீசும் என்று அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் டூப்ளிசிஸ் 65 ரன்களும், மேக்ஸ்வெல் 68 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 16.3 அவர்களின் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களையும், நேஹல் வதேரா 52 ரன்களையும் குவித்து அசத்தினர்.
தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “நாங்கள் ஒரு இருபது ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இந்த ஆடுகளம் மற்றும் மும்பை பேட்டிங் பலம் ஆகியவற்றுக்கு 220 ரன்கள் சரியாக இருந்திருக்கும். அவர்கள் ஆழமாக பேட்டிங் செய்கிறார்கள். கடைசி ஐந்து ஓவர்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த ஆடுகளம் வழக்கமான வான்கடே ஆடுகளத்தை விட வேகம் குறைவாக இருந்தது.
சூர்யகுமார் அன்றைய நாளில் சிறப்பாக இருக்கும் பொழுது அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம். பல பந்துவீச்சு விருப்பங்களை அவருக்கு எதிராக பயன்படுத்தவே முடியாது. சிராஜ் இந்த தொடரில் மிகவும் அருமையாக இருந்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டின் இயல்பில் பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் அழுத்தத்தில்தான் இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.