கிரிக்கெட் வாரியத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை - ஃபகர் ஸமான்!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர்களில் ஒருவராக திகழந்தவர் ஃபகர் ஸமான். பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதுவரை 82 ஒருநாள் போட்டிகளிலும், 92 டி20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இதில் மொத்தமாக 11 சதங்கள் மற்றும் 29 அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியுள்ள இவர், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஃபகர் ஸமான் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடற்தகுதி தேர்வில் ஃபகர் ஸமான் தோலியடைந்ததன் காரணமாகவே அவர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும் இந்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ரன்களைச் சேர்க்க தவறியதால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அச்சமயத்தில் ஃபகர் ஸமான், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிட்டு எக்ஸ் பதிவில் தனது கருத்தி பதிவுசெய்திருந்தார்,
அவரது பதிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சியடையவில்லை மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவிற்குப் பிறகு வெளியிடப்பட்ட மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஃபகர் ஸமான் நீக்கப்பட்டார். இந்நிலையில் ஃபகர் ஸமான் தனது பதிவு குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார். அத்துடன், தாம் அந்த பதிவை வெளியிட்டிருக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று உணர்வதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆவர், "பாபர் ஆசாமுக்கு ஆதவராக எக்ஸில் பதிவை வெளியிட்டது குறித்து நான் பின்னர் யோசித்தேன். அப்போது நான் அந்த பதிவை செய்திருக்க கூடாது என்று உணர்ந்தேன். ஆனால் மக்கள் எனது பதிவை முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டனர். நான் வாரியத்தின் முடிவை விமர்சிக்கிறேன் என்று அவர்கள் நினைத்தார்கள், ஆனால் இது 100 சதவீதம் தவறு. மேலும் அந்த பதிவின் நேரத்தை பார்த்தால், பிசிபி என்னை ஒப்பந்தத்தில் இருந்து நீக்குவதற்கு முன்பு வெளியிட்டிருந்தேன்.
மேற்கொண்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாபர் ஆசாம் விமர்சிப்பதாக 2-3 நாள்களாக செய்திகளில் பார்த்தேன். மேலும் நான் நினைத்தேன், பாபர் அணிக்காக இவ்வளவு செய்துள்ளார், ஆனால் அவர்கள் அவரை அணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பினர். இதை பார்த்து பிறகு தான் நான் அவருக்கு ஆதரவாக எனது கருத்தை தெரிவித்தேன். ஆனால் கிரிக்கெட் வாரியத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்பது எனக்கு புரிகிறது.
Also Read: Funding To Save Test Cricket
என் ஜூனியர் கிரிக்கெட் வீரர்களிடம் நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் கிரிக்கெட் வாரியத்தை விட நீங்கள் பெரியவர் அல்ல என்று கூறுவேன். அவர்கள் விளையாடும் நாள்களில் நீங்கள் அவர்களை விமர்சிக்க வேண்டாம். ஆனால் இந்த சர்ச்சையில் எனது விளக்கம் என்னவென்றால், அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பே நான் எனது எக்ஸ் பதிவை வெளியிட்டேன் என்பது மட்டும் தான்” என்று தெரிவித்துள்ளார்.