WC Qualifier: சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய தொடரின் சிறந்த அணியை அறிவித்தது ஐசிசி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் மகளிர் அணியானது விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிபெற்று அசத்தியது.
அதேசமயம் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி என 0.626 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், வங்கதேச மகளிர் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகள் என 0.639 புள்ளிகளைப் பெற்று புள்ளிபட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் வங்கதேச அணி தகுதிபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்டது.
இந்நிலையில் இத்தொடரில் சிறந்த விளங்கிய வீராங்கனைகளைக் கொண்டு ஐசிசி தங்களுடைய அணியை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி ஐசிசி தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தொடக்க வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸின் கேப்டன் ஹீலி மேத்யூஸும், பாகிஸ்தானின் முனீபா அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு மூன்றாம் வரிசை வீராங்கனையாக வங்கதேசத்தின் ஷர்மின் அக்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன்பின் 4ஆம் வரிசையில் ஸ்காட்லாந்து அணி கேப்டன் கேத்ரின் ப்ரைஸும், 5ஆம் வரிசையில் வங்கதேச அணியின் நிகர் சுல்தானாவும், 6ஆம் வரிசையில் பாகிஸ்தானின் கேப்டன் ஃபாத்திமா சனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு இந்த அணியின் கேப்டனாகவும் ஃபாத்திமா சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் ஆல் ரவுண்டர் சினெல்லே ஹென்றிக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த அலியா அலீன், ஸ்காட்லாந்தின் கேத்ரின் ஃபிரேசரும், பாகிஸ்தானின் நஷ்ரா சந்து மற்றும் சதியா இக்பால் ஆகியோரும் லெவனில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அணியின் ரிஸர்வ் வீரராக வங்கதேசத்தை சேர்ந்த ரபேயா கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் இந்த அணியில் அயர்லாந்து, தாய்லாந்து அணிகளைச் சேர்ந்த எந்த வீராங்கனைக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி தேர்வு செய்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று அணி
Also Read: Funding To Save Test Cricket
ஹெய்லி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), முனீபா அலி (பாகிஸ்தான்), ஷர்மின் அக்தர் (வங்கதேசம்), கேத்ரின் பிரைஸ் (ஸ்காட்லாந்து), நிகர் சுல்தானா (வங்கதேசம்) (விக்கெட் கீப்பர்), ஃபாத்திமா சனா (பாகிஸ்தான்) (கேப்டான்), சினெல்லே ஹென்றி (வெஸ்ட் இண்டீஸ்), ஆலியா அலீன் (வெஸ்ட் இண்டீஸ்), கேத்ரின் ஃபிரேசர் (ஸ்காட்லாந்து), நஷ்ரா சந்து (பாகிஸ்தான்), சதியா இக்பால் (பாகிஸ்தான்) ரிசர்வ் வீரர்: ரபேயா கான் (வங்கதேசம்)