ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்!

Updated: Tue, Aug 29 2023 19:51 IST
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்த மதன் லால்! (Image Source: Google)

நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சஞ்சு சாம்சனை பேக்கப் வீரராக சேர்த்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் இந்திய அணி தேர்வின்போது பேசிய ரோஹித் சர்மா, “இந்திய வீரர்கள் யார் எந்த இடத்தில் வேண்டுமானால் விளையாட முன்வர வேண்டும். இதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் எனது இடம், இதுதான் பேட்டிங் செய்ய எனக்கு சிறந்த இடமென யாரும் சொல்லக்கூடாது” எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால், “இது வினோதமான கேப்டன்சியாக இருக்கிறது. யாரை எங்கு வேண்டுமானால் பேட்டிங் செய்ய சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அந்ததந்த இடத்திற்கான பேட்டர்கள் அவர்களது இடத்திலேயே விளையாட வேண்டும். இந்திய அணி ஆசிய கோப்பை, உலகக் கோப்பை வெல்ல வேண்டுமெனில் 4ஆவது, 8ஆவது இடங்களில் விளையாடுபவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். 

பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொண்டே இருந்தால் யாருக்குமே நம்பிக்கை இருக்காது. ஒரு சில போட்டிகளில் போட்டியின் தன்மைக்கேற்ப ஆர்டரை மாற்றலாமே தவிர ஒவொரு வீரருக்கும் அவர்களது பேட்டிங் ஆர்டர் தெரிந்திருக்க வேண்டும். இது டி20 போட்டிகள் இல்லை. தொடக்க வீரர்கள் சரியாக விளையாடினால் அதற்கேற்றார்போல மிடில் ஆர்டர் பேட்டர்கள் விளையாட வேண்டும். 

துவக்கம் சரியில்லையெனில் அதையும் சரிசெய்து அதற்கேற்றார்போல விளையாட வேண்டும். எனவே மிடில் ஆர்டர் என்பது சிறப்பான இடமாகும். யார் எங்கு வேண்டுமானால் விளையாடலாம் என்பது விசித்தரமாக உள்ளது” எனக் கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை