டி20 உலகக்கோப்பை 2024: சோபிக்க தவறிய நட்சத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளாப் லெவன்!

Updated: Tue, Jul 02 2024 14:36 IST
டி20 உலகக்கோப்பை 2024: சோபிக்க தவறிய நட்சத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஃப்ளாப் லெவன்! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு ஐசிசி மற்றும் முன்னாள் வீரர்கள் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்து வருகின்றனர். ஆனால் மறுபக்கம் ஒவ்வொரு அணியிலும் உள்ள பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் பெரிதளவில் சோபிக்காமல் இருந்த வீரர்கள் குறித்து அதிகளவில் பேசப்படவில்லை. இதன் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்படாத நட்சத்திர வீரர்களைக் கொண்டு தொடரின் ஃப்ளாப் லெவனை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். 

அந்தவகையில் இந்த அணியில் முதலிடத்தை பிடிக்கும் வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் இருக்கிறார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் பேட்டிங்கில் சொதப்பியதோடு, அணியின் கேப்டனாகவும் சோபிக்க தவறினார். இதனால் இந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டனாகவும் பாபர் ஆசாமை தேர்வு செய்துள்ளோம். இவரைத்தொடர்ந்து இந்த அணியின் மற்றொரு தொடக்க வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் ரீஸா ஹென்றிக்ஸைத் தேர்வுசெய்துள்ளோம். இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் அவர் பேட்டிங்கில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு இந்த அணியில் இந்திய வீரரான விராட் கோலியின் பெயரையும் சேர்திருக்கலாம். ஆனாலும் இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததால் அவரது பெயர் இந்த அணியில் இடம்பிடிக்க வில்லை. அதேசமயம் இந்த அணியின் பேட்டிங் வரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (4 போட்டிகளில் 28 ரன்கள் மட்டுமே), வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மேன் பவல் (7 போட்டிகளில் 102 ரன்கள் மட்டுமே) ஆகியோரும் தங்களது மோசமான செயல்பாடுகள் கரணமாக இடம்பிடித்துள்ளனர்.

மேலும் இந்த அணியில் மூன்று ஆல் ரவுண்டர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அந்தவகையில் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆல் ரவுண்டராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிய இந்திய அணியின் ரவீந்திர் ஜடேஜா, வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன், ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் ஜடேஜா 8 போட்டிகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஷாகிப் அல் ஹசன் 7 போட்டிகளில் விளையாடி 111 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். முகமது நபியைப் பற்றி பேசினால், அவர் 8 போட்டிகளில் விளையாடி 56 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு இந்த அணியின் விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் இடம்பிடித்துள்ளார். அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளி விளையாடியதுடன் வெறும் 27 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பல நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடிய நிலையில் அவர்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர். அந்தவகையில் அணியின் வேகப்பந்து வீச்சில் மதீஷா பதிரானா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாலர் மிட்செல் ஸ்டார்க் 5 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அதேசமயம் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்தியிஷா பதிரானா தனது அணிக்காக மூன்று போட்டிகளில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அவர்களுடன் ஆஃப்கனைஸ்தான் அணியின் நூர் அஹ்மதுவும் இந்த உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கொண்டு தான் இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் ஃபிளாப் லெவனை நாங்கள் உருவாக்கியுள்ளோம். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

T20 World Cup 2024 Flop XI: பாபர் ஆசாம் (கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், கேன் வில்லியம்சன், ரோவ்மன் பாவெல், மேத்யூ வேட், ஷாகிப் அல் ஹசன், முகமது நபி, ரவீந்திர ஜடேஜா, மதிஷா பதிரானா, மிட்செல் ஸ்டார்க், நூர் அஹ்மது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை