உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் அணிகள் இதுதான் - ஹாசிம் அம்லா கணிப்பு!

Updated: Sun, Sep 24 2023 14:18 IST
உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் அணிகள் இதுதான் - ஹாசிம் அம்லா கணிப்பு! (Image Source: Google)

இந்தாண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் உலகம் முழுவதும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கலை கட்ட தொடங்கி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அனைத்து நாடுகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கின்றன.

மேலும் வருகின்ற 29ஆம் தேதி முதல் உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பையில் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் பற்றிய கருத்துக்கணிப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த வருட உலக கோப்பையின் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என அறிவித்துள்ளனர்.

ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் உலகக் கோப்பையின் அரை இறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஹாசிம் அம்லா இந்த வருட உலகக் கோப்பை போட்டிகளில் இந்த நான்கு அணிகள் தான் தகுதி பெறும் என தனது கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்த வருட உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும் . ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளும் வலுவாக இருந்தாலும் மேற் சொன்ன 4 அணிகள் உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்று தான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தனது நாடான தென் ஆப்பிரிக்க அணி குறித்து பேசிய அவர், “வெளியில் இருந்து வரும் எந்த ஒரு சத்தத்தையும் பொருட்படுத்தாதீர்கள். உங்களுடைய போட்டிகளிலும் உங்களுடைய பலத்திலும் நம்பிக்கை செலுத்துங்கள். உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டி தொடர்களின் போது நிச்சயமாக அழுத்தம் இருக்கும். அதே நேரம் உங்களுடைய ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தி வெளியில் இருந்து வரக்கூடிய கவனச்சிதறல்கள் மற்றும் அழுத்தங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை