AUS vs WI: ஒருநாள் தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!

Updated: Mon, Jan 22 2024 12:22 IST
AUS vs WI: ஒருநாள் தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு! (Image Source: Google)

ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இந்த ஒருநாள் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அறிமுக வீரர்களான ஃபிரெசர் மெக்கர்க், ஸேவியர் பார்ட்லெட், லான்ஸ் மோரிஸ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளடு. 

இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கு தேவையான ஓய்வை வழங்குவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்துள்ளாதல் அவரது இடத்தில் மேத்யூ ஷார்ட் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அணியின் துணைக்கேப்டன் டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே, ஆடம் ஸாம்பா, ஜோஷ் இங்லிஸ் போன்ற நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, ஜேக் ஃபிரெசர்-மெக்குர்க், லான்ஸ் மோரிஸ், ஆடம் ஸாம்பா, மேத்யூ ஷார்ட். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை