எல்பிஎல் 2021: தம்புலா ஜெயண்ட்ஸை பந்தாடியது கலே கிளாடியேட்டர்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் - தம்புலா ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்ததால் ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கலே கிளாடியேட்டர்ஸ் அணி குசால் மெண்டிஸ், பனுகா ராஜபக்ஷ ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 14 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களைச் சேர்த்தது.
இதில் குசால் மெண்டிஸ் 35 ரன்களையும், ராஜபக்ஷ 33 ரன்களையும் சேர்த்தனர். ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் இம்ரான் தஹிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஜெயண்ட்ஸ் அணியில் டிக்வெல்லா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் - லியாங்கே இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் லியாங்கே அரைசதம் விளாசினார்.
அதன்பின் சால்ட் 41 ரன்னில் ஆட்டமிழக்க, லியாங்கேவும் 51 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் ஸ்கோரை எட்டமுடியவில்லை.
இதனால் 14 ஓவர்கள் முடிவில் தம்புலா ஜெயண்ட்ஸ் அணியால் 125 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் கலே கிளாடியேட்டர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தம்புலா ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது..