விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர்!
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோற்ற போதும், ரசிகர்களுக்கு ஆறுதலாய் இருந்த விஷயம் விராட் கோலியின் சதம் தான். 1000 நாட்களுக்கும் மேலாக சதமடிக்காமல் இருந்த அவரின் காத்திருப்பும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முடிவு பெற்றது.
அந்த போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சதம் மட்டுமல்லாமல் அந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ( 276 ரன்கள் ) 2ஆவது இடத்தை பெற்று அசத்தினார். ஆனால் கோலி சதமடித்ததில் இருந்துமே தற்போது புதிய குழப்பம் உருவாகியுள்ளது.
அதாவது விராட் கோலி சதமடித்தது ஓப்பனிங் வீரராக களமிறங்கி தான். எனவே அவர் ஓப்பனிங் வீரராக களமிறங்கினால் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியும். கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் கூட விளையாடுவார் என்பதால் இந்தியாவின் ஓப்பனிங்கை மாற்றலாம் என பல வல்லுநர்கள் கூறினர்.
இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கோலி ஓப்பனிங் ஆட வேண்டும் என்ற முட்டாள்தனமான குழப்பத்தை தொடங்காதீர்கள். அவரால் கே.எல்.ராகுல் அல்லது ரோகித்துடன் சேர்ந்து ஓப்பனிங் ஆட முடியாது. 3ஆவதாக வரும் வீரர் எப்போதுமே சூழலுக்கு ஏற்ப ஆடும் தன்மையுடன் இருப்பார்.
ஒருவேளை ஓப்பனிங் வீரர்கள் முதல் 10 ஓவர்கள் நின்று ஆடிவிட்டால், சூர்யகுமார் யாதவ் 3ஆவது வீரராக களமிறங்கலாம். அதுவே வெகு சீக்கிரம் விக்கெட் விழுந்துவிட்டால் விராட் கோலி 3ஆவது வீரராக விளையாடலாம். கோலியால் ஆட்டத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் மாற்றி எடுத்து செல்ல முடியும். இதனால் அவருக்கு மிடில் ஆர்டர் தான் சரியாக இருக்கும். அதில் தான் வெற்றியும் கண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.