ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப்போல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் அணி, உலக ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 5 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஃபிஞ்ச் - ஷேன் வாட்சன் இணை அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஃபிஞ்ச் 25 பந்துகளில் தனது அரைசத்தைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து 108 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர். 

Advertisement

அதன்பின் 53 ரன்களில் ஃபிஞ்ச் ஆட்டமிழக்க, மறுமுனையில் 55 ரன்களைச் சேர்த்திருந்த ஷேன் வாட்சனும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜாக்ஸ் காலிஸ், ராஸ் டெய்லர், கெவின் ஓ பிரையன், மோர்னே வேன்வைக் என அனைவரும் ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் உலக ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. மகாராஜாஸ் தரப்பில் அபாரமாக பந்துவீச்சிய ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய மகாராஜாஸ் அணிக்கு கௌதம் கம்பீர் - ராபின் உத்தப்பா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் 29 ரன்களைச் சேர்த்திருந்த ராபின் உத்தப்பா ஆட்டமிழக்க, அடுத்து வந்த முரளி விஜய் 11 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக ரிட்டையர்ட் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி கம்பீர் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதற்கிடையில் சுரேஷ் ரெய்னா 19 ரன்களில் ஆட்டமிழக்க, 68 ரன்களைச் சேர்த்திருந்த கவுதம் கம்பீரும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய முகமது கைஃப், யூசுப் பதான், ஸ்டூவர்ட் பின்னி, இர்ஃபான் பதான் ஆகியோர் ரன்களை குவிக்க தவறினர். 

இதன் காரணமாக 20 ஓவர்களில் இந்தியா மகாராஜாஸ் அணியால் 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் உலக ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News