கார்ட்னர், சதர்லேண்ட் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல்!

Updated: Thu, Oct 23 2025 10:15 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா மகளிர் - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கைத் தேர்வு செய்து இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஏமி ஜோன்ஸ் - டாமி பியூமண்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பியூமண்ட் ஒரு முனையில் சிறப்பாக விளையாட, மறுபக்கம் ஏமி ஜோன்ஸ் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய ஹீதர் நைட் 20 ரன்னிலும், கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய டாமி பியூமண்ட் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 78 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் அலிஸ் கேப்ஸி 38 ரன்களையும், சார்லீ டீன் 26 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் அனபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் போப் லிட்ச்ஃபீல்ட் ஒருரன்னிலும், ஜார்ஜியா வோல் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த அனுபவ வீராங்கனைகள் எல்லிஸ் பெர்ரி 13 ரன்களிலும், பெத் மூனி 20 ரன்னிலும் என ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய மகளிர் அணி 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த அனபெல் சதர்லேண்ட் - ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

Also Read: LIVE Cricket Score

இதில் அபாரமாக விளையாடிய சதர்லேண்ட் அரைசதம் கடந்த நிலையில், மறுபக்கம் ஆஷ்லே கார்ட்னர் சதமடித்து மிரட்டினார். மேலும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சதர்லேண்ட் 9  பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 98 ரன்களையும், ஆஷ்லே கார்ட்னர் 16 பவுண்டரிகளுடன் 104 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 40.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய அனபெல் சதர்லேண்ட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை