பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் கேரி கிறிஸ்டன்!

Updated: Mon, Oct 28 2024 11:53 IST
Image Source: Google

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி  லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. ஏனெனில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது, நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறமால் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இதையடுத்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன், இயக்குநர் மிக்கி ஆர்தர், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், பேட்டிங் பயிற்சியாளர் ஆண்ட்ரூ புட்டிக் ஆகியோர் நீக்கப்பட்டனர். மேலும் பாபர் ஆசாமும் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.  அதன்பின் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் அணிக்கான கேப்டனாக ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் அதன்பின்னரும் பாகிஸ்தான் அணி மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் படுதோல்வியைத் தழுவியதை அடுத்து, அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்த முகமது ஹபீஸும், டி20 அணியின் கேப்டன் பதவில் இருந்து ஷாஹீன் அஃப்ரிடியும் நீக்கப்பட்டனர். இதனையடுத்து நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் குரூப் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. ஆனால், இதில் கேரி கிர்ஸ்டன் பங்கு பெரிதாக இல்லை. மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போதே பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்துள்ளனர் என்பதையும் அவர் உறுதிசெய்திருந்தார். 

 

அதன்பின்னர் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடர்களில் விளையாடி வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணித் தேர்விலும் கேரி கிர்ஸ்டன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. மேற்கொண்டு அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வானையும், துணைக்கேப்டனாக சல்மான் அலி அகாவுமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளதிலும் கேரி கிறிஸ்டனுக்கு விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது.

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கேரி கிறிஸ்டன் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடர்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி புதிய பயிற்சியாளரை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணியில் பல குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் தற்போது தலைமை பயிற்சியாளரும் விலகியுள்ளது அந்த அணிக்கு கூடுதல் நெருங்கடியை கொடுத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை