அணியின் சீனியர் வீரர்கள் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி நேற்று ஆசிய கோப்பையில் மோதிய போட்டியில் முதல் நான்கு முக்கிய விக்கெட்டுகளை வெகு சீக்கிரமாக இழந்துவிட்டது. பாகிஸ்தானின் ஆரம்பகட்ட வேகப்பந்து வீச்சு தாக்குதலை கொஞ்சம் கூட இந்திய பேட்ஸ்மேன்களால் கணிக்கவே முடியவில்லை. இந்த நிலையில் நேற்று ஐந்தாவது இடத்தில் களம் இறக்கப்பட்ட இஷான் கிஷான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 பந்துகளில் 82 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இவர் ஹர்திக் பாண்டியா உடன் சேர்ந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார். இதன் காரணமாகவே இந்திய அணி 266 என்ற கௌரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. கே.எல்.ராகுல் இன்னும் உடல் தகுதியை எட்டாத காரணத்தினால், அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் இஷான் கிஷான் உறுதியாக விளையாடுவார் என்று தெரிந்தது. ஆனால் அவருக்கு அவருடைய துவக்க இடத்தை தருவார்களா? இல்லை நடு வரிசையில் இடம் தருவார்களா? என்கின்ற கேள்வி இருந்தது.
இந்த நிலையில் நடு வரிசையில் அனுப்பப்பட்ட அவருக்கு வேகப்பந்துவீச்சாளர்களின் அச்சுறுத்தல் கொஞ்சம் குறைந்து, லெக் ஸ்பின், லெஃப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் பவுலர்கள் வர, இடதுகை வீரர் என்பதால் விளையாடவும் எளிமையாக இருந்தது. எனவே அவர் சிரமமின்றி ரன்களை எடுக்க மெல்ல மெல்ல பார்ட்னர்ஷிப் உருவாகி இந்திய அணி மீண்டு வந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இதற்கு மாற்றான ஒரு யோசனையை கூறியதோடு, இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவர் மீதும் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இஷான் கிஷான் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடக்க வீரராக வந்து மூன்று அரை சதங்கள் அடித்திருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது மூத்த வீரர்கள்தான் கடினமான இடங்களில் வந்து பேட்டிங் செய்ய வேண்டும். இளைஞர்களை அனுப்பக்கூடாது.
யாராவது நம்பர் நான்கில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றால் விராட் கோலி இல்லை ரோஹித் சர்மா அந்த பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். மூத்தவர்கள் கடினமான இடங்களில் பேட்டிங் செய்ய வேண்டும். இளையவர்களுக்கு எந்த இடம் வசதியானதாக இருக்கிறதோ அதை கொடுத்து அவர்களை வசதியாக்கி முன்னேற்ற வேண்டும். மேலும் கேஎல் ராகுல் அணிக்கு திரும்ப வருவதாக இருந்தாலும் கூட, இஷான் கிசானை முதன்மை விக்கெட் கீப்பராக இந்திய உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!