பாபர் ஆசாமினால் அணி மீதான அழுத்தத்தை எடுக்க முடியவில்லை - கௌதம் கம்பீர்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணி மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இந்த முறை பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் நீக்கப்பட்ட துணை கேப்டன் சதாப் கான் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 75 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார். மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 17 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் கேப்டன் பாபர் ஆசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். மேல் வரிசை பேட்ஸ்மேன்கள் யாரிடம் இருந்தும் அதிரடியான ஆட்டம் வரவில்லை.
கடைசி கட்டத்தில் ஷதாப் கான் மற்றும் இஃப்திகார் தலா 40 ரன்கள் கொஞ்சம் அதிரடியாக எடுத்தார்கள்.இதன் காரணமாக பாகிஸ்தான் 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. கடைசி நான்கு ஓவரில் அதிரடி காட்டியதால் இந்த ரன் வந்தது.
இந்த நிலையில் பாபர் அசாம் பற்றி பேசிய கௌதம் கம்பீர் “பாபர் ஆசாம் அழுத்தத்தில் இருக்கிறார். அவரது அணியும் அழுத்தத்தில் இருக்கிறது. பாபர் பெரிதாக செய்ய வேண்டும். அவருக்கு அதற்கான தரமும் திறனும் இருக்கிறது. நான் பாபரை முதல் ஐந்து பேட்ஸ்மேன்களுக்குள் இந்த உலகக் கோப்பையில் தேர்ந்தெடுத்தேன். அவரால் இந்த உலகக் கோப்பையில் மூன்று நான்கு சதங்கள் அடிக்க முடியும் என்று கூறியிருந்தேன். இந்திய ஆடுகளத்தில் இதை செய்யும் திறன் பாபருக்கு இருக்கிறது.
அணி ஆக்ரோஷமாக விளையாட வேண்டுமென்றால் பாபர் முன்னின்று ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். பாபர் முதலில் சுதந்திரமாக அவுட் ஆஃப் பாக்ஸ் கிரிக்கெட் விளையாட வேண்டும். அதேபோல் அவர் ஒரு அவுட் ஆஃப் பாக்ஸ் கேப்டன் ஆகவும் செயல்பட வேண்டும். 60 அல்லது 70 பந்துகளில் அரை சதம் அடிப்பது, 120 பந்துகளில் 80 ரன்கள் எடுப்பதால் எந்த பயனும் கிடையாது. அவர் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய விதத்தை பார்த்தால் அவர் நிறைய அழுத்தத்தை உண்டாக்கினார் என்று தெரிகிறது. அவரால் அணி மீதான அழுத்தத்தை எடுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.