ஃபினிஷிங் ரோலிற்கு இவர் தான் சரிபட்டு வருவார் - சுனில் கவாஸ்கர்!
கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்ட முதல் ஒருநாள் தொடரிலேயே தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது இந்திய அணி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் ராகுலின் கேப்டன்சியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
அடுத்ததாக பிப்வரி 6ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா ஃபிட்னெஸுடன் அணிக்கு திரும்பிவிடுவார் என்பதால், அவர் கேப்டன்சி செய்வார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை இன்னும் இருப்பதும், சில ரோல்கள் உறுதி செய்யப்படாததும் அம்பலப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை. கடந்த காலங்களில் 4ஆம் வரிசை வீரராக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 5ஆம் வரிசைக்கு தள்ளப்பட்டது என சிக்கல்கள் நீடிக்கின்றன. தோனிக்கு பிறகு இந்திய அணியின் ஃபினிஷராக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக இந்திய அணியில் அவரது இடத்தையே கிட்டத்தட்ட இழந்துவிட்டார்.
இனிமேல் அவர் ஒரு ஆல்ரவுண்டராக இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பது கடும் சவால். எனவே ரிஷப் பந்துக்கு ஃபினிஷர் ரோல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5ஆம் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரும், ஃபினிஷர் ரோலுக்கான 6ஆம் வரிசையில் வெங்கடேஷ் ஐயரும் இறக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஃபினிஷர் ரோல் குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “ரிஷப் பந்த் அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் 4ஆம் வரிசையில் இறக்கப்படுகிறார். பொறுமையும் ஆக்ரோஷமும் கலந்த கலவையான வீரராக அவர் இல்லை.
எனவே ரிஷப் பந்தை 6ஆம் வரிசையில் இறக்கி அவரை ஒரு ஃபினிஷராக உருவாக்குவதே சரியான ஐடியா. சூழ்நிலையை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடித்து ஆடக்கூடிய வீரர் ரிஷப் பந்த். எனவே அவர் ஃபினிஷிங் ரோலுக்குத்தான் சரியான வீரர்” என்று தெரிவித்துள்ளார்.