எந்த அணியையும் நாங்கள் எளிதாக எடை போடவில்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்!

Updated: Fri, Oct 07 2022 20:37 IST
Image Source: Google

மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. நிதா தர் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்திய அணி இந்த இலக்கை எளிதாக விரட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு இந்திய அணிக்குச் சவாலாக அமைந்தது. முதல் 5 விக்கெட்டுகளை 12.1 ஓவர்களில் 65 ரன்களுக்கு இழந்தது இந்திய அணி. இதனால் கடைசிக்கட்டத்தில் போராட வேண்டிய நிலைமை உருவானது. ரிச்சா கோஷ் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணிக்குப் பயத்தை ஏற்படுத்தினார். 

ஆனால் இந்திய பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் தோல்வியடைய நேரிட்டது. இந்திய அணி, 19.4 ஓவர்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நஷ்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் வீராங்கனை அலியா ரியாஸ், பவுண்டரி அருகே அபாரமாக கேட்சுகளைப் பிடித்தார். பலருடைய கடின உழைப்பால் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான் மகளிர் அணி. 

இதன்மூலம் மகளிர் ஆசியக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக இந்தியாவைத் தோற்கடித்துள்ளது பாகிஸ்தான் அணி. இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் இந்திய அணி 11 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 3ஆவது முறையாகத் தோற்றுள்ளது இந்தியா. தாய்லாந்துக்கு எதிராக தோற்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராகச் சிறப்பாகப் பந்துவீசி வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “எல்லோருக்கும் வாய்ப்பு தர எண்ணினோம். போட்டி நடைபெறும்போதே அதைச் செய்துவிட வேண்டும். ஆனால் இன்று எங்களுடைய முயற்சியில் தோல்வி கிடைத்து விட்டது. விரட்டி விடக்கூடிய இலக்கு தான். நடு ஓவர்களில் ரன்களை ஓடி எடுத்து பந்துகளை வீணடிக்காமல் இருந்திருக்கலாம். நிறைய பந்துகளில் ரன்கள் எடுக்கவில்லை. 

நான் 7ஆவது பேட்டராகக் களமிறங்கியதற்குக் காரணம் - யார் புதிதாக அணிக்குள் வந்தாலும் அவர்களுக்கு முக்கியமான ஆட்டத்துக்கு முன்பு விளையாட வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும், எப்போது அணியை மாற்றினாலும் விளையாடுவதற்கு வீராங்கனைகள் தயாராக இருக்க வேண்டும் என்பதால் தான். 

எந்த அணியையும் நாங்கள் எளிதாக எடை போடவில்லை. தோல்வியும் விளையாட்டின் ஓர் அங்கம். நேற்று தாய்லாந்து நன்கு விளையாடினார்கள். இன்று பாகிஸ்தான் நன்றாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார். 
    

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை