அணி நிர்வாகம் என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்ததில் மகிழ்ச்சி - ஹாரி ப்ரூக்!
ஐபிஎல் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற 19ஆவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு இங்கிலாந்தின் 24 வயதான இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி ப்ரூக் 55 பந்தில் சதம் அடித்து, அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுக்க பெரிதும் உதவியாக இருந்தார். இந்த தொடரில் இவர் அடித்த ஆட்டம் இழக்காத இந்த சதம் இந்தத் தொடரில் முதல் சதமாகும்.
பெரிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு இறுதியில் 24 ரன் வித்தியாசத்தில் தோல்வியே வந்தது. கடுமையாக போராடிய நிதிஷ் ரானா மற்றும் ரிங்கு சிங் இருவரும் அரை சதம் எடுத்தார்கள். ஆனாலும் கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவை என்ற காரணத்தால் இலக்கை வெற்றிகரமாக தாண்ட முடியவில்லை. இரு அணிகளுமே தங்களது நான்காவது போட்டியில் முடிவில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் உள்ளார்கள்.
சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற ஹாரி ப்ரூக் பேசுகையில் “இப்போது என் கேர்ள் பிரண்ட் மட்டுமே இருக்கிறாள். என் குடும்பத்தினர் ஜஸ்ட் கிளம்பி சென்று விட்டார்கள். அவர்கள் இருந்தால் என்னால் ரன்கள் அடிக்க முடியாது என்று எனக்கு தெரியும். நான் இங்கு சுழற்பந்து வீச்சில் விளையாட சற்று சிரமப்பட்டேன். எனவே பவர் பிளேவை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். மேலும் மிடில் ஓவர்களில் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து சுழற் பந்துவீச்சை மற்றவர்கள் விளையாடுவதற்கு கொடுத்தேன்.
இது எனக்கு மிகவும் சிறந்த ஒரு இரவு. வெற்றி பெற்ற பக்கத்தில் இருப்பது சிறப்பானது. பேட்டிங் வரிசையில் மேல் இடத்தில் விளையாடுவது நல்லது என்று எல்லோரும் கூறுவார்கள். அணி நிர்வாகம் என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்த ஆட்டம் என்னுடைய சிறந்த ஒன்றில் இருக்கும். சோசியல் மீடியாவில் போய் பார்த்தால் மக்கள் குப்பையாக ஏதாவது சொல்லி வைப்பார்கள். ஆனால் நான் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இதைப் பற்றி கவலைப்படாமல் ஒதுக்கி விட்டு இருக்கும் மனநிலையில் வந்து விளையாடினேன்” என்று கூறியிருக்கிறார்.