வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியைத் தழுவிய கிளாமோர்கன்; அசத்தலான கேட்சை பிடித்த ஜேம்ஸ் பிரேசி - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்தின் பழம்பெரும் கிரிக்கெட் தொடரானது கவுண்டி சாம்பியன்ஷிப். இதில் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் இரண்டிற்கான நடப்பு சீசன் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் குளஸ்டர்ஷயர் (Gloucestershire) மற்றும் கிளாமோர்கன்(Glamorgan) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செல்டன்ஹாமில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கிளாமோர்கன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குளஸ்டர்ஷயர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய குளஸ்டர்ஷயர் அணியானது முதல் இன்னிங்ஸில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கமுடியாமல் தடுமாறி 179 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய கிளாமோர்கன் அணியும் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்த காரணத்தால் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும் முதல் இன்னிங்ஸில் கிளாமோர்கன் அணியானது 18 ரன்கள் முன்னிலை வகித்தது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த குளஸ்டர்ஷயர் அணியின் தொடக்க வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் 184 ரன்களையும், மைல்ஸ் ஹம்மோண்ட் 121 ரன்களையும் விளாச, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேம்ஸ் பிரேசி 204 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன்மூலம் குளஸ்டர்ஷயர் அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 610 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாகவும் அறிவித்தது.
இதன்மூலம் கிளாமோர்கன் அணிக்கு 593 ரன்கள் என்ற இமாலய இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய கிளாமோர்கன் அணிக்கு மார்னஸ் லபுஷாக்னே 119 ரன்களையும், கேப்டன் சாம் நார்த்ஈஸ்ட் 187 ரன்களையும் குவிக்க, மற்ற வீரர்களின் பங்களிப்பின் காரணமாக அந்த அணியான இலக்கை நோக்கி முன்னேறியது. இறுதியில் அந்த அணி வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது.
அதன்படி அஜீத் டேல் வீசிய 152ஆவது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜேமி மெக்கில்ராய் அடிக்க முயன்று பந்தை எட்ஜ் செய்ய குளஸ்டர்ஷயர் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பிரேசி அற்புதமான கேட்சை எடுத்து போட்டியை டை ஆக்கினார். இதன்மூலம் வெற்றிக்காக கடைசி வரை போராடிய கிளாமோர்கன் அணியானது ஒரு ரன்னில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்யும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இருப்பினும் இப்போட்டியானது சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அதன்படி, இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட்டில் 593 என்பதே அதிகபட்ச 4ஆவது இன்னிங்ஸ் ஸ்கோராகும். சர்வதேச அளவில் இதில் 3ஆவது அதிகபட்ச 4ஆவது இன்னிங்ஸ் ஸ்கோராகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போட்டியில் குளஸ்டர்ஷயர் அணியின் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பிரேசி பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.