அதிக டி20 சிக்ஸர்கள்; ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார் கிளென் மேக்ஸ்வெல்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் பியூ வெப்ஸ்டர் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன்மூலம், இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹரிகேன்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நாதன் எல்லிஸ் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். இதனால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்ற கிளென் மேக்ஸ்வெல் ஒரு சிறப்பு சாதனை ஒன்றையும் பதிவுசெய்தார். அதன்படி இப்போட்டியில் மேக்ஸ்வெல் 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா 448 போட்டிகளில் 525 சிக்ஸர்களை விளாசி 7ஆவது இடத்தில் இருந்தார்.
ஆனால் தற்போது கிளென் மேக்ஸ்வெல் 458 போட்டிகளில் 430 இன்னிங்ஸ்களில் 528 சிக்ஸர்களை அடித்து அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 1056 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், கீரென் பொல்லார்ட் 901 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், ஆண்ட்ரே ரஸல் 729 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும், நிக்கோலஸ் பூரன் 593 சிக்ஸர்களுடன் 4ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
பிக் பாஷ் லீக் டி20 தொடரின் தற்போதைய சீசனில் கிளென் மேக்ஸ்வெல்லின் செயல்திறன் சிறப்பாக இருந்து வருகிறது. இதுவரை இத்தொடரில் 8 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 59.40 சராசரியுடன் 297 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவர் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார். முன்னதாக ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கிளென் மேக்ஸ்வெல் ரூ.4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.